Saturday, April 27, 2013

குழந்தை வளர்ப்பு குறித்தான எனது பார்வைகள் - I



1) குழந்தைகள் அலைப்பேசி உபயோகிக்க பழகுவது தனது பெற்றோரை பார்த்து தான்..  குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரங்களில் அலைபேசியில் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக பேசுவதை தவிருங்கள். அவர்கள் நம்மை கவனித்துக்கொண்டிருக்க நாம் நீட்டி முழங்குவது தான் பிரச்சனைக்களுக்கான ஆரம்பப்புள்ளி.
2)தொலைக்காட்சி என்பது ஒரு இளைப்பாறுதலுக்கான  இடம் மட்டுமே என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். வெளியே சென்று வந்து விட்டால் துணியை மாற்றுகிறோமோ இல்லையோ முதலில் ரிமோட்டை கையில் எடுக்கும் பழக்கத்தை கை  விட வேண்டும்.
3) 2.30 மணி நேர சினிமா என்பதை முதலில் வெளியே மட்டும் வைத்துக்கொள்வோம்.. குடும்பமாக போய் பார்த்து விட்டு வீட்டில் வந்து ஒரு அரைமணி நேரமாகவே அதை பற்றி உரையாடுவோம்... பல எல்லைகளை தொட்டு வரும் குடும்ப உரையாடல் தான் உறவுபலத்தின் முதல்படி என்பதை புரிந்துக்கொள்வோம்..

4)தொலைக்காட்சியில் சினிமா என்பதை வாரம் ஒருமுறை வைத்துக்கொள்ளலாம்..  அதை தவிர்த்தான அதிகபடியான சினிமா நம்மையும், குழந்தைகளையும் சினிமா போதையில் உட்படுத்தும்..

5) தந்தியோ, தினமணியோ, விகடனோ, கல்கியோ, காலச்சுவடோ, உயிர்மையோ நாம் நமது வாசிப்பை அதிகப்படுத்துவோம்.. குழந்தைகளுக்கான சிற்றிதழ்கள் தபால் வழி வீட்டுக்கே வருகின்றது..குழந்தைகளின் பெயருக்கு அவற்றை வர செய்வது, அவர்கள் வாசிப்பின் உடன் இருப்பது   மேலும் அவர்களை ஊக்குவிக்கும். 
6) நமது அம்மா அப்பா, மனைவியின் அம்மா அப்பா குறித்தான எந்த 'நெகடிவ்' பக்கங்களையும் குழந்தைகள் முன் விவாதிப்பதை தவிர்ப்போம். நமது குழந்தை பெரியவர்களை மதிப்பது, நம்மை வயதான தருணத்தில் கவனிக்க வேண்டும் என்ற எண்ணுவது போன்றவை, நாம் நமது அம்மா அப்பாவிடம் எப்படி இருக்கிறோம் என்பதை பொறுத்ததே..
7) படிப்பு என்பது அறிவையும், ஆளுமையும் அதிகரிக்க செய்யவே.. பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல என்பதை குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துவோம். 
8)கணவனுக்கும்-மனைவிக்கும் எந்த முரண்பாடு இருந்தாலும் குழந்தைகள் முன் காண்பிக்க வேண்டாம். அவர்கள் முன் சண்டைப்போடவும் வேண்டாம்.. குழந்தைகளுக்கு இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளை பெற்றோரிடம் சொல்லாமலே மறைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். 
9)குழந்தைகளுக்கு சேமிக்க கற்றுக்கொடுங்கள். அவர்கள் ஏதாவது சிறப்பாக செய்தால் அதை உற்சாகப்படுத்தும் நோக்கில் 5 ரூபாய்,10 ரூபாய் என்று கொடுத்து சேமிக்க வையுங்கள்.. பண்டிகை தருணங்களில் புத்தாடைகளை அல்லது  அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு பொருளை அவர்கள் பிடித்த வகையில் அந்த சேமிப்பில் இருந்து வாங்கிக்கொள்ள செய்யுங்கள்.. நானே சேமிச்சு வாங்கினதாக்கும் என்று ஒரு 5 வயது குழந்தை மகிழ்ச்சி பொங்க சொல்லும் போது அதன் ஆளுமை திறனையும், சேமிக்கும் பண்பையும் அதிகரிக்கிறோம் என்று புரிந்துக்கொள்வோம்.

10) குழந்தைகளை ஒரு அழகுப்பொம்மையாக சித்தரிப்பதை தவிர்ப்போம்..உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தால் 'வணக்கம்', 'வாங்க','டாட்டா' சொல்ல தெரிந்தலே போதுமானது. 'பாட்டு பாடு',' டான்ஸ் ஆடிகாட்டு' போன்ற அபத்தங்களை தவிர்ப்போம்..

புகைப்படங்கள் உதவி: கூகுள்