Friday, November 19, 2010

முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன் ---- புத்தக விமர்சனம்


ஜனவரி 29 - 2009 - "இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னை வாலிபர் தீக்குளித்து மரணம்" என்ற செய்தியை தாங்கிய ஒரு தமிழ் மாலை நாளிதழை தேனீர் கடைகளின் முன் முகப்பில் பார்த்த போது 'என்ன முட்டாள்தனம் இது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இங்கே இறந்தால் போர் நின்று விடுமா?' என்ற பொதுபுத்தியால் உருவான கருத்தே எம்மிடம் மேலோங்கி இருந்தது.

அடுத்த நாள் "விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை.........." என துவங்கும் முத்துக்குமரனின் மரண சாசனத்தை படித்த போது முட்டாள்கள் நாங்கள் தான் என்பதை உணர வெகுநேரம் ஆகவில்லை.தன் உடலை புதைக்காமல் உயிராயுதம் ஏந்துங்கள் என்று சொல்லி மரித்து போன முத்துக்குமரனை பற்றி பின் வந்த செய்திகள் எல்லாமே எம்மை வெட்கப்பட வைக்கும் ஆச்சரியங்கள். தமிழ் மொழியை, தமிழ் இனத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனின் உணர்விலும் அதன்பின் கலந்து சகோதரன் ஆகிப்போனான் எங்கள் முத்துக்குமரன்.

வறுமையை வாழ்க்கையாக உடுத்தி தூங்கி கிடந்த தமிழ் சமூகத்தை தன் மரணத்தின் மூலம் தட்டி எழுப்பிய சகோதரன் முத்துக்குமரனின் வாழ்க்கையை பால்யம் முதல் படம் பிடிக்கும் புத்தம் தான் "முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்".

முத்துக்குமரனுக்கு தமிழ் உணர்வு ஊட்டிய புலவர் தமிழ்மாறனுக்கு படையல் இட்டு துவங்குகிறது இந்த புத்தகம்.

திருச்செந்தூரில் குமரேசன்- சண்முகத்தாய் ஆகியோருக்கு மூத்த மகனாக பிறந்த முத்துக்குமார், சென்னை கொளத்தூரில் நடைபயின்று, தேனியில் தன் ஆரம்ப கல்வியை துவங்கி, தன் உயர்நிலை கல்வியை சொந்த ஊரிலேயே படித்தார். பள்ளி பருவத்திலேயே தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த முத்துகுமரன், கலந்து கொள்ளும் பேச்சுப்போட்டிகளில் தனது பள்ளிக்கு பெருமை சேர்க்க தவறவில்லை. முத்துக்குமரனை பேசுவதற்காக அழைத்து சென்றாலே பள்ளிக்கு ஒரு பரிசு நிச்சயம் என்ற நிலையை உருவாக்கி இருந்தார்.

புத்தர் முதல் காந்தி வரை ஒரு சிறு நிகழ்வு தான் அவர்களின் அடுத்தகட்ட வாழ்க்கையை தீர்மானித்து இருகின்றது. முத்துகுமரனின் வாழ்க்கையிலும் அவ்வாறு நடந்த ஒரு நிகழ்வே அவரை பின்னாளில் ஒரு தியாகி ஆக்கி இருக்கிறது என குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அது.... ஒரு கிறிஸ்துமஸ் தினம். முத்துகுமரனின் வறுமை வாழ்கையை அறிந்திருந்த அவருடைய வகுப்பாசிரியை சசிலதா, அந்த பண்டிகை நாளில் மதிய விருந்துக்காக அழைத்திருந்தார். அப்போது முத்துகுமரன் இயேசுவை பற்றி கேட்க, ஆசிரியையும் சொல்லி விட்டு " மக்களின் நன்மைக்காக மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும், அதற்கு நீ அனைவரையும் நேசிக்க வேண்டும், அன்பும் கருணையும் கடைசிவரை பற்றி இருக்க வேண்டும், நீ எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்க வேண்டும்" என்று அவர் சொன்ன வார்த்தைகள் அவருள் ஆழப்பதிந்தன.

முத்துக்குமரன் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது பள்ளியில் நடந்த இலக்கிய கூட்டத்திற்கு வந்த புலவர் தமிழ் மாறனின் பேச்சால் கவரப்பெற்று அவரோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது அவரது வாழ்கையில் அடுத்த அத்தியாயம் பிறக்க காரணம் ஆனது என குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

பத்தாம் வகுப்பில் 466 மதிப்பெண் எடுத்து பள்ளியில் இரண்டாவதாக மாணவனாக வந்தாலும், வறுமையின் கொடிய பிடியில் சிக்கி தவித்ததால் அவரால் படிப்பை தொடர முடியாமலே போயிற்று . படிக்கும் போதே தமிழ் தேசிய இயக்கங்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட முத்துக்குமரன்"ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கம்" ஆரம்பிக்கப்பட்ட போது அதில் கலந்து கொண்டு சுவரொட்டி ஒட்டி இருக்கிறார். பதின்ம வயதை கடந்த போது, புரட்சிகர இயக்கங்களோடு தன்னை இணைத்து கொண்டு களப்பணி ஆற்றினார்.



இளமையில் வறுமை கொடிது என்பார்கள் ஆனால் முத்துக்குமரனின் பிறப்பு முதல் இறப்பு வரை வறுமை எப்படி அவரை தொடர்ந்து துரத்தி வந்திருக்கிறது என்பதையும் துல்லியமாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் . ஒரு சீட்டு கம்பனியில் வேலைக்கு சேர்ந்து பின் தாயின் காசநோய் காரணமாக சென்னை வந்தும், தாயை மீட்க முடியாமல் போய் இருக்கிறது. மளிகை கடையில் உதவியாளனாக, குயின்ஸ்லாந்து கேளிக்கை பூங்காவில் பாதுகாவ
ராக என பல இடங்களில் வேலை பார்த்து தங்கை திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்த சில காலத்திலேயே விபத்து ஒன்றில் தனது சகோதரர் வசந்தகுமாரை பறி கொடுத்து இருக்கிறார்.

வறுமை இன்னொரு உடன்பிறத்தவனை போல் கூடவே இருந்தாலும் புத்தங்கள் படிக்கவோ, வாங்கவோ மட்டும் அவர் தவறவே இல்லை. அவர் இறந்த போது அவருடைய சேமிப்பாக மட்டும் சுமார் 800 புத்தகங்கள் அவரிடம் இருந்திருக்கின்றன. வாசிப்பு அவர் வாழ்வின் அங்கமாகி, அதுவே அவருக்குள்ளான சமூகக் கோபத்தை அணையாது வளர்த்தெடுத்து போர் குணத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றதாக கூறுகிறார் நூலாசிரியர்.

"இன்றைய கல்வி முறைகள் அறியாமையை போக்குவதற்கு பதிலாக வேலைக்காரர்களை உருவாக்குவதாக அமைகிறது" என முத்துகுமரன் மனம் வெதும்பி தன்னிடம் குறிப்பிட்டதாக கூறும் நூலாசிரியர் "படித்து அறிவில் சிறந்து இச்சமூக வளர்ச்சிக்கும் மாந்தர் குல முழுமைக்குமான அர்ப்பணிப்புமிக்க வாழ்வை அவர்கள் பெற்று கொள்ள வேண்டும் என்று விரும்புவதில்லை. கல்வி அமைப்பு முழுக்க முழுக்கச் சுயநலப் போக்கு கொண்டதாகவே இருக்கிறது" என வருத்தப்பட்டதையும் பதிவு செய்ய தவறவில்லை. தமிழ்நாட்டில், தமிழ் வழி கல்வியின் அவசியம் குறித்துஏக்கத்துடனே தன் குறிப்பேட்டில் எழுதியுள்ளார் முத்துக்குமரன்.

எழுத்து சீர்திருத்தம் தேவைற்றது என்பது குறித்து அவர் எழுதி, தீராநதியில் வெளிவந்த விமர்சனத்தையும் இந்த நூலில் குறிப்பிட்டு உள்ளார் நூல் ஆசிரியர்.


திரைப்படம் மக்களுடன் உரையாடுவதற்கான சிறந்த ஊடகம் என கருதி திரைப்பட
துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். குறும்படங்கள், ஆவணப்படங்கள் உருவாக்கப்பட வேண்டும். மாற்று சினிமா நோக்கி மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும் என்பதிலே ஆர்வமாகஇருந்திருக்கிறார். திருநங்கைகள் குறித்து ஒரு ஆவண படம் எடுப்பதிலும் பங்காற்றி இருக்கிறார்.

ஈழப்போராட்டம் முத்துகுமரனுடைய உதிரத்திலே கலந்து ஓடியது என கூறும் ஆசிரியர், பேச்சு வார்த்தைகள், ராணுவ தாக்குதல்கள், மாவீரர் தின உரைகள் என கடந்த பத்தாண்டு கால ஈழ போராட்ட செய்திகளை சேகரித்து வைத்திருந்ததாகவும் "வாழ்வில் ஒரு முறையாவது அந்த வீரம் விளைந்த ஈழம் மண்ணில் கால்பதிக்க வேண்டும், அங்குள்ள பனைமரங்களை கட்டிப்பிடிக்க வேண்டும், என் ஆசைகள் நிறைவேறுமா?" எனமுத்துக்குமரன் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

முத்துகுமரன் வீரச்சாவை தழுவிய அந்த நாள் காலையிலே தன்னை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் தன்னால் பேச முடியவில்லை என்பதை வேதனையோடு குறிப்பிடும் நூலாசிரியர், அல்ஜீரிய பாடகர் மத்தூர் பின் - இன் பாடலோடு இந்நூலை முடிக்கிறார்.
அது...

நீ இறந்து விட்டாலும்
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறாய்
ஒரு வரலாறாக
ஒரு போராட்டமாக
ஒரு நம்பிக்கையாக......

ஆம்..... உண்மையில் இந்த புத்தகத்தை ஒரே வீச்சில் படித்து முடித்த போது என் அழுகையை அடக்கவே முடியவில்லை..... முத்துக்குமரனை இந்த தமிழ் சமூகம் கொலை செய்து விட்டதாகவே கருதுகிறேன்.. ஆம் இது ஒரு அப்பட்டமான கொலை தான் . இதன் முதல் குற்றவாளிகள் ஆளும் வர்க்கம் என்றால் ஈழபோரில் மவுனியாக இருந்த இந்த தமிழ் சமூகமும் குற்றவாளிப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்களே.......

மூச்சு விடும் கடைசி தருவாயில் என்ன சாதி என செவிலி குறிப்பெடுக்க கேட்க, தமிழ் சாதி என்று கூறி இறந்த 'கரும்புலி' முத்துகுமாரின் வாழ்க்கை வரலாற்றையும் , அவருடைய கவிதைகள் தாங்கி வந்துள்ள இந்த புத்தகத்தை அருமையாக தொகுத்துள்ளார் நூலாசிரியர் ஆ.கலைச்செல்வன்.

தமிழ் மொழியை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த தமிழ் தேசியவாதியின் வரலாற்றை கண்டிப்பாக வாசிக்க பரிந்துரைக்கிறேன்.

தமிழ் தேசம் வெளியீடாக வந்திருக்கும் இந்த புத்தகத்தின் விலை ரூபாய் 60.இணையம் மூலம் வாங்க இங்கே சொடுக்கவும்.

தபால் மூலம் பெற்று கொள்ள....................
தமிழ் தேசம்,
87/31, காமராஜர் நகர்,
3 வது தெரு, சூளை மேடு,
சென்னை - 94