Monday, July 13, 2009

மரணத்தின் நெடி சூழ்ந்த கலந்துரையாடல்...


காலம் கணித்த ஒரு
பொன் நாளில்
புற நகரின் கடற்கரை
ஓரம் குழுமி
கலந்துரையாட
தீர்மானித்தோம்
கல்லூரி கால நண்பர்கள்
அனைவரும்......

அச்சுப தினத்தின்
முற்பகலிலேயே தொற்றி கொண்டது
பரபரப்பு ஒவ்வொரு
அலைப்பேசி அழைப்புகளால்.......

முன் வரிசையில்
அமர்ந்திருக்கும் தோழி
முதலில் அழைத்து
சொன்னாள்
'அலுவலக பணி
ஆயிரம் இருப்பதாய்'
அடுத்து அழைத்த
அருமை தோழன் சொன்னான்
'தலை வலி' என்று......

பின் வரப்போகும் எல்லா
பிணிகளுக்கும், பணிகளுக்கும்
பயந்து அலைபேசியை
அணைத்து வைத்தேன்
சில மணி நேரம்......

சரி வருபவர் வரட்டும்
என்று எண்ணி
பேருந்தின் படி தொங்கி
கடற்கரையோர பேருந்து நிலையத்தில்
இறங்கிய போது
என்னோடு சேர்த்து
ஆண் பாலினம் நான்கு பேர்......

பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்கு பின்னால்
ஒருமித்த குரலாய் ஒதுங்கினோம்
மரணத்தின் நெடி சூழ்ந்த
அச் சாராய கூடத்தில்......

கலந்துரையாடல்
கல்லூரி கால
கிசு கிசுக்களாய் மாறி
முட்டி திரும்பின
வியர்வையும், வாந்தியும்
வழிந்தோடிய
அவ்வறை முழுதும்....

வாயும் வயிறும் கூசி
தள்ளாடி எழுந்த போது
வாய் பிளந்து கிடந்தன
கடைசியாய் உடைக்கப்பட்ட
பீர் பாட்டிலும் அதன் மூடியும்
எங்களை பார்த்து....