Tuesday, April 21, 2009

வட்ட பேரு - I


"எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு" - என்று கீதாசாரம் சொல்கிறது. இப்பூமி நம்மை அழைத்து வரும் போது நிர்வாணீயாக மட்டுமே அழைத்து வருகிறது. ஆனால் பூமியை விட்டு செல்லும் போது தான் அவன் தன்னை தவிர எத்தனை அடையாளங்களை விட்டு செல்கிறான்!!!

தன் உறவுகள், கற்ற கல்வி, கொண்டாடிய நட்பு, சேகரித்த பொருட் செல்வம் என ஒரு மனிதனை சுற்றி உள்ள அடையாளங்கள் ஏராளம். ஆயினும் அவன் அவனுடைய பெயரை வைத்தே பெரும் பாலும் அடையாள படுத்த படுகிறான். தன் பெற்றோர் வைத்த பெயரை தவிர வேறு விதமாக தன்னை அடையாள படுத்தி கொள்ள அரசியல் வாதிகளும், வெள்ளி திரை நாயகர்களும் தனக்கு தானே "வீர புலி", "அஹிம்சை தளபதி", "இளைய வீரன்" என்றும் சூடி கொள்கிறார்கள். இவர்கள் எத்தனை புலிகளுடன் சண்டை போட்டார்கள் என்றோ, அஹிம்சையால் எத்தனை நாடுகளுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள் என்றோ நாம் யாருமே யோசிப்பதே இல்லை.

இப்படி தான் வைத்த பட்ட பெயர்களை தவிர நம்மை சுற்றி இருக்கும் நண்பர்கள் நமக்கு எதாவது ஒரு பட்ட பெயரை சூட்டி விடுகிறார்கள் நாம் கேட்காமலே... அதுவே எம் கிராமத்து வழக்கில் "வட்ட பேரு"

பெரும் பாலும் இந்த "வட்ட பேரு (பட்ட பெயர்)" நம்முடைய குழந்தை பருவத்திலே நம் நண்பர்களால் நமக்கு சூட்ட பட்டு விடுகிறது. நாட்கள் செல்ல செல்ல யார் நமக்கு ""வட்ட பேரு" வைத்தார்கள் என்பதே மறந்து விடுகிறது, நாம் நரைத்தாலும் நமக்கு சூட்டப்பட்ட "வட்ட பேரு" மட்டும் என்றுமே இளமையாகவே உலா வருகிறது நம்மை சுத்தி.

வட்ட பேருகள் மிகவும் சுவாரசியம் ஆனவை. பல பெயர்களுக்கு நதிமூலம், ரீசிமூலம் எல்லாம் இருந்தாலும் காலம் எல்லா காரணங்களையும் அழித்து விடுகிறது அல்லது மறக்க செய்து விடுகிறது வட்ட பேரை தவிர. வட்ட பேரு பெரும்பாலும் ஒருவர் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சி அல்லது பொறாமையாலே வைக்கப்படுகிறது.. ஒரு தனி மனிதனால் எதிராளியை வெளிப்படையாக எதிர்க்க இயலாத நேரங்களில் தான் வட்ட பேரு உருவாகிறது.

மாதா, பிதா - வுக்கு அடுத்ததாக வணங்கப்படும் குருவானவர்களே, உலகில் வட்ட பேரால் மிகவும் பாதிக்க பாடுபவர்கள். ஒரு ஆசிரியருக்கு ஒன்றை விட அதிகமாகவே வட்ட பெயர்கள் சூட்ட படுகிறது. ஒரு மாணவனை எந்த ஒரு விதத்திலும் துன்புறுத்தாத ஆசிரியர் கூட இந்த வட்ட பேருக்கு விதி விலக்காக முடியாது, ஆனாலும் சில வேளைகளில் சற்று கால தாமதம் ஆகலாம்.

எங்கள் கிராமத்து ஆரம்ப பள்ளி கூடத்தில் 90-களில் புதிதாக ஒரு ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார். அப்போது இருந்த ஆசிரியர்களிலேயே மிகவும் இளையவராகவும், புதியவராகவும் இருந்ததால் அவரை மாணவர்கள் "புது வாத்தியான்" என்று அழைத்தனர். கால கடிகாரம் 20 வருடங்கள் சுழன்ற போதும் இன்றும் அவர் மாணவர்கள் மத்தியில் "புது வாத்தியானாகவே" வலம் வருகிறார்.......

- தொடரும்...